"ஓபிஎஸ்ஸும் தான் போனாரு; நான் பேசியதில் தவறில்லை" - நவநீத கிருஷ்ணன் ஓபன் டாக்!

ஒரே நாளில் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார் அதிமுக பிரமுகரும் எம்பியுமான நவநீத கிருஷ்ணன். அதற்கெல்லாம் காரணம் திமுக எம்பியான கனிமொழியை புகழ்ந்து பேசியது தான். திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் மகளின் திருமணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகை தந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நவநீத கிருஷ்ணன், " மாநிலங்களவைக்குப் புதிதாக சென்ற போது பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன். அப்போது டி.கே.ரங்கராஜன், கனிமொழி ஆகியோா் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தனர். ஒரு முறை மத்திய அமைச்சருடன் எனது அனுபவமின்மை காரணமாக சண்டை போட வேண்டியிருந்தது. அப்போது சகோதரி கனிமொழி என்னை சமாதானப்படுத்தி அவரே மத்திய அமைச்சருடன் பேசினார். நாங்கள் எடுத்துக் கூறிய விஷயம் தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய விஷயம் என எடுத்துரைத்தார்.
மேலும் எனக்கும் ஒரு அறிவுரை கொடுத்து, நம்மூா் மாதிரி பேசக்கூடாது என்றும், எரிச்சலூட்டாமல் அழுத்தம் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். ஒரு போராட்டத்தின் போது தேவையில்லாமல் சிக்கலில் மாட்டி விடக் கூடாது என எனக்கு புரிய வைத்தாா்” என கனிமொழியை பாராட்டிப் பேசினார். அரசியல் நாகரிகப்படி நவநீத கிருஷ்ணனின் பேச்சில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்து கொடுத்த அதிமுகவின் எழுதப்படாத விதிகளின்படி இது குற்றம். ஆகவே அடுத்த நாளே அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், எடப்பாடி கூட்டாக அறிவித்தனர்.
இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நவநீத கிருஷ்ணன், "கனிமொழி குறித்து நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற போது ஓபிஎஸ் அண்ணன் அந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். இதேபோல் எடப்பாடி தாயாரும் ஓபிஎஸ் மனைவியும் காலமான போதும் ஸ்டாலின் துக்கம் விசாரிக்கச் சென்றார். அரசியலில் இது போன்ற நிகழ்வுகள் நாகரீகமானவை. அதை தான் நானும் செய்தேன். என் மீதான கட்சி தலைமையின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.