பாதுகாப்பு குளறுபடியால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்.. அதன் வலி தெரியும்.. சோனியா விளக்கம் கொடுக்க வேண்டும்
பாதுகாப்பு குளறுபடியால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர், அதன் வலி தெரியும் என்பதால் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து சோனியா காந்தி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் கட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார். பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி விளக்கம் கொடுக்க வேண்டும் மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 16 மணி நேரமாகியும், பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. பாதுகாப்பு குளறுபடி காரணமாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார். அதனால் அவருக்கு அந்த வலி நன்றாக தெரியும். அவர் பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடி குறித்து விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
மத்திய பிரதேசத்தில் லாக்டவுன் அமல்படுத்துவது அல்லது சந்தைகளை மூடுவது தொடா்பாக மாநில உள்துறை அமைச்சகத்திடம் எந்த திட்டமும் இல்லை. முகக்கவசம் (மாஸ்க்) அணியாததற்காக அபராதத் தொகையை அதிகரிக்கவும், திறந்தவெளி சிறைகளை அமைக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.