ரூ.9,500 கோடி லஞ்சம்! மோடி ஒரு ஊழல்வாதி- நாராயணசாமி
காங்கிஸுக்கு துரோகம் செய்து விட்டு கட்சி மாறி பாஜகவில் சேர்ந்தோரை எக்காலத்திலும் காங்கிரஸில் இணைக்கக்கூடாது என்று காங்கிரஸ் புதுச்சேரி தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று ராஜீவ்காந்தியின் நினைவு ஜோதி யாத்திரை நிகழ்ச்சியின் போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு ஜோதி யாத்திரை கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்துஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் சார்பாக புதுச்சேரிக்கு இன்று வந்தது. புதுச்சேரி மாநில ஐஎன்டியூசி தலைவர் பாலாஜி தலைமையில் ரெட்டியார்பாளையத்தில் தனியார் ஹோட்டலில் ராஜீவ்காந்தி படத்துக்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்வைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், தலைவர்கள் சூளுரை எடுத்துள்ளனர். மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைய போகிறது. ராகுல் இந்நாட்டின் பிரதமராக வருகிறார். புதுச்சேரியில் 2026ல் ஆட்சி மாற்றம் வரவேண்டும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்ல கடுமையாக உழைத்து அர்ப்பணிப்பை காட்டினார்களோ, அதேபோல் சட்டப்பேரவை தேர்தலிலும் காட்ட ராஜீவ் ஜோதியில் உறுதி மொழியை இன்று எடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத்தேர்தலின் போது சொத்தை காப்பாற்றவும், பாஜகவிடம் கையூட்டு பெற்று காங்கிரஸுக்கு யார் துரோகம் செய்து ஓடி போனார்கள் என்பது புதுச்சேரி மக்களுக்கு தெரியும். காங்கிஸுக்கு துரோகம் செய்து விட்டு கட்சி மாறி பாஜகவில் சேர்ந்தோரை எக்காலத்திலும் காங்கிரஸில் இணைக்கக்கூடாது என்று காங்கிரஸ் புதுச்சேரி தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.காங்கிரஸ் ஒருசிலர் கட்சிமாறிகளுடன் தொடர்பில் உள்ளனர். அந்த தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும். ஓடுகாலிகள் எல்லாம் காங்கிரஸுக்கு தேவையில்லாதவர்கள், பதவிசுகம், பணத்துக்காக ஓடியோரை காங்கிரஸில் சேர்க்க மாட்டோம்.
பிரதமர் மோடி ஊழல்வாதி. தேர்தலுக்கு நன்கொடை வாங்கியதே உதாரணம். குறிப்பாக, சிபிஐ வழக்கு, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமானவரித்துறை வழக்கு உள்ள நிறுவனங்களிடம் ரூ. 9500 கோடி வாங்கியுள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை கைது செய்யலாமா, அவர்களின் வழக்குகளை தள்ளுபடி செய்ய ஊழல் செய்த கம்பெனிகளிடம் நிதி வாங்கியுள்ளனர். அது லஞ்சம். இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? எதிர்க்கட்சிகள் மீது பொய் குற்றச்சாட்டு சொல்லி தலைவர்களை சிறைக்கு அடைக்க மோடி பார்க்கிறார். இதற்கான முற்றுப்புள்ளி ஜூன் 4ல் இருக்கும். வாக்கு பதிவு இயந்திரத்தில் ஊழல் செய்ய வாய்ப்புள்ளது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதற்கான ஆதாரத்துடன் வாக்களித்தோர் விடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வாக்குச்சீட்டு முறையை அவர் ஏற்க மறுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.