என்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.. குடியரசு தலைவருக்கு சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கடிதம்

 
நந்த் குமார் பாகல்

வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது சாத்தியமில்லை என்றால், தேசிய வாக்காளர் தினத்தில் என்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்த் குமார் பாகல். இவர் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நந்த் குமார் பாகல் கூறியிருப்பதாவது: நாட்டின் குடிமக்களின் அனைத்து அரசியலமைப்பு உரிமைகளும் பெரிய அளவில் மீறப்படுகின்றன. ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகியவை அழிக்கப்படுகின்றன. 

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

ஜனநாயகத்தின் மூன்று தூண்களின்படி ஊடகங்களும் செயல்படுகின்றன. நாட்டின் குடிமக்களை யாரும் கண்டு கொள்வதில்லை. குடிமக்கள் மத்தியில் அச்ச உணர்வு உள்ளது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் உச்ச உரிமையாகும். இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.  தேசிய அளவில் அல்லது உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட எந்த நிறுவனங்களோ அல்லது அரசாங்கங்களோ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு சதவிகிதம் துல்லியமாக சான்றளிக்கவில்லை. இதையும் மீறி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இயந்திரங்களை பயன்படுத்தி வாக்குப்பதிவு நடத்துவதன் மூலம், எனது வாக்களிக்கும் அரசியல் சாசன உரிமை மீறப்படுகிறது. 

ராம் நாத் கோவிந்த்

வளர்ந்த நாடுகளில் இன்னும் தேர்தலுக்கு வாக்குச் சீட்டு மற்றும் பெட்டி முறைகள் பின்பற்றப்படுகிறது. இந்தியாவிலும் அதை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் என்னை இறக்க அனுமதிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் நான் பட்டனை அழுத்தியவருக்கு ஆதரவாக எனது வாக்கு போடப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது போன்ற சூழ்நிலைகளில் எனது அனைத்து உரிமைகளும் மீறப்படும்போது, என் வாழ்க்கையின் நோக்கமே தொலைந்து போகிறது மற்றும் இந்திய குடிமகனாக இருப்பதால் என் மனசாட்டி என்னை இனி வாழ அனுமதிக்கவில்லை. ஜனாதிபதி ஜி நீங்கள் அரசியலமைப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளீர்கள். ஆனால் எனது அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. இதனால் எனக்கு இறப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.