பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸின் தலைமையின்கீழ் மட்டுமே போராட முடியும்.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

 
காங்கிரஸ்

பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸின் தலைமையின்கீழ் மட்டுமே போராட முடியும் என்று மம்தா பானர்ஜிக்கு காங்கிரசின் மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமையன்று  3 நாள் பயணமாக மும்பை சென்று இருந்தார். கடந்த புதன்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். அதன் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இப்போது இல்லை என்றும், ராகுல் காந்தியின்பெயரை குறிப்பிடாமல், நீங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருக்க முடியாது என்றும் மறைமுகமாக தாக்கினார்.

மம்தா பானர்ஜி

மம்தாவின் கருத்து காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல்  செய்தியாளர்களிடம் கூறுகையில், மதவாத சக்திகள் தேசத்தை விற்கும் மனப்போக்குடன் மத்தியில் அமர்ந்து, அரசியலமைப்பு முறையை முடிவுக்கு கொண்டு வந்து அதை நோக்கி செயல்படுவதால், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸின் தலைமையின்கீழ் மட்டுமே போராட முடியும் என்று தெரிவித்தார். மேலும் நானா படோல் டிவிட்டரில்,  தனிப்பட்ட லட்சியங்களை விட நாடு முக்கியமானது. பா.ஜ.க.வுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும், ஆணவத்துடன் அல்ல என்று பதிவு செய்து இருந்தார்.

நானா படோல்

மகாராஷ்டிரா வருவாய் துறை அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பாலாசாஹேப் தோரட் கூறுகையில், ராகுல் காந்தியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிப்தன் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிராக எந்தவொரு தனி கட்சியும் போராட முடியாது. அந்த கட்சி தனது அரசியல் ஆதாயம் மற்றும் தனிப்பட்ட  லட்சியங்களை பற்றி தொடர்ந்து சிந்தித்து கொண்டிருந்தால், நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும்  காங்கிரஸ் மட்டுமே சாத்தியமான வாய்ப்பு என தெரிவித்தார்.