என் மனைவி ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர் - அண்ணாமலை அதிரடி

 
a

ஜெயலலிதாவை போல் கருணாநிதியைப் போல் ஆளுமை மிக்க தலைவராக நானும் இருப்பேன் நானும் தலைவன் என்று மார்தட்டிய அண்ணாமலைக்கு, ஜெயலலிதாவை மாதிரி ஒரு நபர் உலகத்தில் யாரும் இல்லை. ஜெயலலிதா மாதிரி இனி ஒருவன் பிறக்கப் போவது கிடையாது என்று ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததால் ,   என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர்கள் என்று ஆவேச பாய்ச்சலை  காட்டியிருக்கிறார் அண்ணாமலை.

j

வலுத்து வரும் அதிமுக - பாஜக மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் தலைவன் இப்படித்தான் இருப்பேன்.  விருப்பம் உள்ளவர்கள் இருக்கட்டும்.  அதற்காக என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.  ஜெயலலிதா இருக்கவில்லையா? கருணாநிதி இருக்கவில்லையா? அதேபோன்று ஆளுமையுடன் நான் இப்படித்தான் இருப்பேன் என்று  சொன்ன பதில்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ,  ’’அண்ணாமலை எப்படி தலைவரானார் என்ற விஷயத்திற்கு நான் போக விரும்பவில்லை . ஆனால் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் .  ஜெயலலிதா மாதிரி இனி ஒருவன் பிறக்கப் போவது கிடையாது . செஞ்சி கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது.  மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது .  ஒரு கட்சியில் கூட்டணியில் ஒரு சில உணர்ச்சிகள் இருக்கும் . அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது தான்  தலைவரின் பண்பு .   அதற்காக தலைவர்களே உணர்ச்சிகளை தூண்டக்கூடாது’’ என்று கூறினார்.

jj

இந்நிலையில்,   கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயக்குமாரின் பதிலடி குறித்த கேள்விக்கு,    ‘’நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை.  அதே நிலைப்பாட்டில் தான் நான் இப்போதும் இருக்கிறேன் . எப்போதும் இருப்பேன்.   ஜெயலலிதாவை நான் என்னுடன் ஒப்பிட்டு கூறவில்லை.   அரசியல் கட்சியில் சில இடங்களில் மேனேஜர்கள் இருப்பார்கள்.  சில இடங்களில் தலைவர்கள் இருப்பார்கள்.   ஜெயலலிதா கூட டெபாசிட் போய் மீண்டும் களத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.   நானும் ஜெயலலிதாவின் பாதையில் தான் சென்று கொண்டு வருகிறேன்.   கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து வருகிறேன்.   என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள்’’ என்றார்.