"தமிழன் உணர்வையும் கொஞ்சம் மதிங்க" - ஆளுநருக்கு சிபிஐ முத்தரசன் வலியுறுத்தல்!
நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், "நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்கள் எண்ணமாகும். அதைத் தான் சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அதற்கு ஒப்புதல் தர தொடர்ந்து தாமதம் செய்வது ஜனநாயக விரோதம்.
![]()
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினும் இருமுறை ஆளுநரை நேரில் சந்தித்து இந்த மசோதாவைஅனுப்பி வைக்க வலியுறுத்தியுள்ளார். அதே கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் அனைத்திந்திய மாணவர்பெருமன்றம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தில் ஆளுநர் விரைவாக முடிவெடுக்க வேண்டும்” என்றார்.


