என்னை ஜெயிக்க வைச்சா.. நவீன இறைச்சி கூடங்களை கட்டுவேன்.. உ.பி. காங்கிரஸ் வேட்பாளர் வாக்குறுதி

 
இறைச்சி கூடம்

தேர்தலில் வெற்றி பெற்றால் நவீன இறைச்சி கூடங்களை கட்டுவேன் என்று மொரதாபாத் (நகர்புறம்) சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுபவர் ரிஸ்வான் குரேஷி வாக்குறுதி அளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 125 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங் காந்தி அண்மையில் வெளியிட்டார். மொரதாபாத் (நகர்புறம்) சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுபவர் ரிஸ்வான் குரேஷி. 

காங்கிரஸ்

ரிஸ்வான் குரேஷி தொகுதி மக்களை கவரும் நோக்கில், தேர்தலில் வெற்றி பெற்றால் நவீன இறைச்சி கூடங்களை கட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ரிஸ்வான் குரேஷி கூறியதாவது: தேர்தலில் வெற்றி பெற்றால், மாவட்டத்தில் நவீன மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட இறைச்சி கூடங்களை கட்டுவேன். 2012ம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயம், இறைச்சி கூடத்தை மூடி, நவீன கருவிகளுடன் புதிய இறைச்சி கூடங்களை கட்ட அரசுக்கு உத்தரவிட்டது. அதுவரை, இறைச்சி கூட உரிமையாளர்களின் வாழ்வாதாதரத்துக்கு அரசுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

ரிஸ்வான் குரேஷி

தேர்தலில் நான் வெற்றி பெற்றால் எனது தொகுதியில் நவீன இறைச்சி கூடங்கள் கட்டப்படுவதை உறுதி செய்வேன்.  மேலும், என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தால், கருளாவில் சாலை விரிவாக்கம், கருளாவில் தண்ணீர் தொட்டி கட்டுதல், ராமகங்கை ஆற்றில் தடுப்பணை கட்டுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.