தமிழகத்தில் விட்டதை புதுச்சேரியில் பிடித்த காங்கிரஸ்- முதல்வர் அவசர ஆலோசனை

 
mkstalin

புதுச்சேரியில் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் 9ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 16ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளை திங்கட்கிழமையுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு தொகுதி பங்கீடுகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இன்னும் சில தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பபட வேண்டும்.   ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பேச்சுவார்த்தை ஒரு வாரமாக நடந்தும், இதுவரை தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் 17 இடங்களை எடுத்து  கொண்டு திமுகவுக்கு 13 இடங்களை ஒதுக்கி அதில் விசிக, இந்திய கமயூனிஸ்ட்டு தலா ஒரு தொகுதி கொடுக்கும்படி கூறியது. ஆனால் 30 தொகுதிகளை சமமாக பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி கொடுக்க திமுக வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சிதான் கூட்டணிக்கு தலைமை வகிப்பதால், கேட்கும் தொகுதிகளை  தர வேண்டும் என கூறியதால், உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் கூட்டணியை இறுதி செய்ய திமுக தலைமை உத்தரவிட்டது. இதனால் நேற்று காலை முதல் காங்கிரசின் வருகைக்காக நட்சத்திர விடுதியில் திமுக மேலிட தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி மற்றும் திமுக மாநில அமைப்பாளர் சிவா உட்பட நிர்வாகிகள் காத்திருந்தனர். திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பியுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமாரும்  காத்திருந்தார். ஆனால் புதுச்சேரி  காங்கிரசார் யாரும் வரவில்லை. புதுவைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கட்சி நிர்வாகிகளிடம் தனியாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இரவு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரவு  10 மணிவரை  12 மணி நேரம் திமுக  காத்திருந்தும் காங்கிரசார் வரவில்லை. இதனால்  ஜெகத்ரட்சகன் எம்பி தலைமையிலான திமுகவினர் அதிருப்தியுடன் தங்கள் கட்சி தலைமையை சந்தித்து முறையிட சென்னை புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் ஒத்துழைக்காத பட்சத்தில் புதுவையில் மாகி, ஏனாம் தவிர்த்து 28 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தனித்து போட்டியிட. தலைமையிடம் திமுக அனுமதி கோருகிறது. திமுக தலைமை அனுமதியளித்தால் திமுக 24 தொகுதிகளிலும், பிற கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளிலும் போட்டியிடும்.  24  தொகுதி வேட்பாளர்கள் பட்டியலையும் திமுகவினர் கையோடு எடுத்து சென்றுள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு நாளை இறுதிநாள் என்பதால் இன்று திமுக தலைமை உறுதியான முடிவை எடுத்து அறிவிக்க உள்ளது.