"கோட்சேவின் வாரிசுகள்".. ஆளுநரை அருகில் வைத்தே முதல்வர் சூளுரை - முற்றும் மோதல்!

 
mk stalin

எதிர்பார்த்தது போலவே திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு வலுத்து வருகிறது. நாகலாந்தில் ஆளுநராக இருக்கும்போதே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் தான் இந்த ரவி. அங்குள்ள மக்களின் கடும் எதிர்ப்பால் தான் வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு அவரை ஆளுநராக நியமித்தது மத்திய அரசு. இவர் மற்றவர்களைப் போல் அரசியல் பால பாடங்கள் கற்காதவர். போலீஸ் அதிகாரியாக ஓய்வுபெற்று கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவர் திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்க கூடும் என சொல்லப்பட்டது.

அவரின் நியமனம் சந்தேகம் வரும்படியாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி ஆருடம் சொன்னார். பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர், பல்வேறு பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்புக்கும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வந்தார். இவற்றின் உச்சக்கட்டமாக குடியரசு தினத்திற்கான வாழ்த்துச் செய்தியில் நேரடியாகவே மத்திய அரசின் கொள்கை பரப்பு செயலாளராக மாறிவிட்டார்.

RN Ravi appointed new Governor of Tamil Nadu, CM Stalin extends greetings |  The News Minute

ஆம் நீட் ஆதரவு, மும்மொழிக் கொள்கை தொடர்பான இரு அரசியல் விவகாரங்களை அந்த வாழ்த்துச் செய்தியில் இடம்பெற்றன. இதனை பகீரங்கமாக விமர்சித்த திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசோலி, "இது நாகலாந்து அல்ல; தமிழ்நாடு. உரசிப் பார்க்க வேண்டாம்" என ஆளுநர் ஆர்.என்.ரவியை மிக மிகக் கடுமையான வார்த்தை பிரயோகங்கள் மூலம் விமர்சித்தது. இது திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினின் மேற்பார்வையில் நடந்திருக்கலாம். ஏனென்றால் அவரின் சமீபத்திய பேச்சுகள் அனைத்தும் அதை தான் உணர்த்துகின்றன.

image

இந்த்துவத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் பிரமாண்ட சமூக நீதி கூட்டணியை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இன்றோ இரண்டு குண்டுகளை பாஜகவை நோக்கி வீசியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியுள்ள மடலில், "மதவெறியையை விதைத்து கலவரத்தை தூண்டிவிடும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள்” என மௌனம் கலைத்துள்ளார். அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜகவின் பொய் பிரச்சாரத்தை மனதில் வைத்தே அவர் இதை சொல்லியிருக்க கூடும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். அடுத்த குண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை நோக்கி எறியப்பட்டிருக்கிறது போலும்.


மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்" என பதிவிட்டுள்ளார். கோட்சேவின் வாரிசுகள் என அவர் யாரை சொல்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் பெரிதாகிக் கொண்டே செல்வதாக  அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.