"அப்போ ஜெயலலிதா; இப்போ ஸ்டாலின்" - ஆளுநரின் அதிகாரத்தை பறிக்க மசோதா விரைவில்...!
மாநிலங்களிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் வேந்தர்கள் அம்மாநில ஆளுநர்கள் தான். வேந்தர்களாக இருந்தாலும் பெரும்பாலும் நிர்வாக நடவடிக்கைகளைக் கவனிப்பதில்லை. அவ்வப்போது மட்டும் மேற்பார்வையிடுவார். முழு பொறுப்பும் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் தான் இருக்கும். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான முழு அதிகாரம் ஆளுநரின் கைவசமே இருக்கிறது. நம் அரசியலமைப்புச் சட்டம் அந்த அதிகாரத்தை அவர்களிடம் வழங்கியிருக்கிறது.
ஒரு மாநில அரசின் கீழ் செயல்படக் கூடிய பல்கலைக்கழகத்தில் கூட ஆளுநர் கைகாட்டு நபர் தான் துணைவேந்தராக இருக்க முடியும். நல்லது தானே என்று நினைக்கலாம். ஆளுநர்களைப் பொறுத்தவரை எந்தக் கட்சியும் சாராமல் செயல்பட வேண்டும். நிலைமை அப்படியா இருக்கிறது. பெரும்பாலான ஆளுநர்களுக்குப் பின்னால் செயல்படுவது மத்தியில் ஆளும் கட்சி தான். ஆகவே துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசியல் தலையீடும் அதிகரிக்கிறது. தங்களுக்குச் சாதகமான பிடித்தமான தங்களுடைய சித்தாங்களைப் பின்பற்றுபவர்களை துணைவேந்தர்களாக நியமிக்கின்றனர்.
குறிப்பாக பன்வாரி லால் புரோகித் தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமித்தனர். அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு எப்படி வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிக்கலாம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்தன. நினைத்தது போலவே அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசிடம் முரண்டு பிடித்தார். அரசிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார். முறைகேடுகளில் சிக்கினார். வழக்கும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் மட்டுமில்லை டெல்லி, மகாராஷ்டிரா என பாஜக ஆளாத மாநிலங்களில் தொடர்ந்து வருகின்றன. இதனையொட்டி சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு ஆளுநரின் அதிகாரத்தை முடிவு செய்து மசோதாவையும் நிறைவேற்றியது. வழக்கமா துணைவேந்தர்களைத் தேடும் தேடல் குழுவானது 5 பேரை தேர்வு செய்து ஆளுநரிடம் வழங்கும். அதில் ஒருவரை தேர்வுசெய்து அவர் நியமிப்பார். ஆனால் புதிய சட்டத்திருத்ததின்படி, தேடல் குழு மாநில அரசிடம் 5 பேர் பட்டியலை கொடுக்கும். அதில் 2 பேரை தேர்வுசெய்து ஆளுநரிடம் அரசு கொடுக்கும். அதில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். அவர் தான் துணைவேந்தர்.
தேடல் குழு பரிந்துரைக்கும் பெயர் பட்டியலுக்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லையெனில், தேடல் குழு புதிதாக 5 பேரை பரிந்துரைக்கும். திருத்துவதற்கு முன்பாக இந்த நடைமுறையில் அரசுக்கு பதில் வேந்தரான ஆளுநர் இருந்தார். அதேபோல இணை வேந்தர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுநர் இல்லா சமயம் அவர் வேந்தருக்குண்டான அதிகாரங்களில் செயலாற்றலாம். ஆனால் இந்த மசோதா அடிவாங்கும் என சொல்லப்படுகிறது. அதாவது மசோதா நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநரின் ஒப்புதலுக்கு தான் செல்லும். அவர் எப்படி ஒப்புதல் வழங்குவார்? ஆகவே இது நிறைவேறாது என்கின்றனர்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இதே போன்றதொரு சட்ட மசோதாவை 1995ஆம் ஆண்டு கொண்டுவந்தார். ஆனால் ஆளுநர் சென்னா ரெட்டி ஒப்புதல் வழங்கவில்லை. இதே நிலை தான் மகாராஷ்டிராவிலும் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இச்சூழலில் இன்று சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ ஜிகே மணி இதுதொடர்பாக கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முதலமைச்சர் ஸ்டாலினோ, மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டு சட்ட திருத்த மசோதாவை அரசு நிறைவேற்றும் என்றார்.