"பேர் வச்சீங்களே.. வாடகை குடுத்தீங்களா?" - எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு "நச்" கேள்வி!
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே அம்மா கிளினிக் மூடல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக உரையை புறக்கணித்து எடப்பாடி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. பொங்கலுக்கு ரூ.2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் ஏதும் வழங்கப்படவில்லை.
ஏழை எளிய மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு அது அம்மா பெயரில் செயல்படுவதால் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதனை மூடி உள்ளது" என்றார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, "திமுக அரசு காழ்ப்புணர்ச்சியான அரசு இல்லை. அம்மா மினி கிளினிக்கை ஆரம்பித்து வைத்தார்கள். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்களை அவர்கள் நியமிக்கவே இல்லையே. பெயருக்கு திட்டத்தை ஆரம்பித்துவிட்டு அந்த கட்டடங்களுக்கு வாடகையும் தராமல் போய்விட்டார்கள்.
அங்கே மருத்துவர் இல்லாத காரணத்தால் தான் அம்மா கிளினிக் மூடப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக அம்மா கிளினீக்கை மூடவில்லை. அப்படியென்றால் நாங்கள் அம்மா உணவகத்தை மூடவில்லையே ஏன்? இதற்கு என்ன பதில் வைத்துள்ளார்கள்? பொங்கலுக்கு நாங்க பணம் கொடுக்கவில்லை என்கிறார்கள்.. நீங்கள் எதற்கு பொங்கலுக்கு பணம் கொடுத்தீர்கள். ஆட்சியில் 5 ஆண்டுகள் இருந்தீர்கள். ஆனால் ஏன் ஒவ்வொரு ஆண்டும் பணம் தரவில்லை? தேர்தல் வரப்போகுது என்பதால், நீங்க பணம் வழங்குனீர்கள்.
ஆனால் எங்கள் ஆட்சி அப்படி இல்லை. சொன்னதை நிறைவேற்றி இருக்கிறோம். ஆட்சி பொறுப்புக்கு வந்தால் கொரோனா நிவாரணம் வழங்குவதாக சொன்னோம். சொன்னபடியே 4 ஆயிரம் நிவாரணத்தொகையை முழுமையாக வழங்கி இருக்கிறோம். சொன்னதை செய்திருக்கிறோம். இப்போதுகூட பொங்கல் பரிசாக 19 பொருட்களை தரமாக தந்திருக்கிறோம்.. கரும்பும் சேர்த்து வழங்கியிருக்கிறோம். இவை அனைத்தையும் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் காழ்ப்புணர்ச்சியால் குற்றஞ்சாட்டுகிறார்கள்” என்றார்.