"சுய விளம்பரம் செய்கிறார்" - செந்தில்பாலாஜி தாக்கு... பாசமலருக்குள் வெடித்தது பூகம்பம்!
வெவ்வேறு கட்சியில் இருந்தாலும் அண்ணன், தங்கை போல பழகியவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும். அண்ணன் மீது ஒரு குற்றச்சாட்டு என்றால் முதலில் அவருக்கு ஆதரவாக நிற்பவர் ஜோதிமணி தான். மக்களவை தேர்தல் தான் இருவருக்குள்ளும் இப்படியொரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கரூர் தொகுதியில் ஜோதிமணியை நிப்பாட்டியதற்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. ஆனால் உடன் நின்றவர் செந்தில் பாலாஜி. தீயாக களப்பணியாற்றி அதிக வாக்கு வித்தியாசத்திலும் வெற்றிபெற வைத்தார்.
நன்றி மறவாத ஜோதிமணி, நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தல், அதற்கு முன்னதாக அரவக்குறிச்சி இடைத்தேர்தல் என செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். வீதி வீதியாக இறங்கி வாக்கு சேகரித்தார். இருவரும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் சேர்ந்தே கலந்து கொண்டனர். மலர்ந்தும் மலராத பாசமலர் படத்திலேயே அண்ணன் தங்கைக்குள் விரிசல் வந்தது. அரசியலில் அது வராமல் இருந்தால் தானே ஆச்சரியம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை என்பது தானே பல மாமங்களாக நாம் போற்றும் பொன் வாக்கியம்.

ஆம் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது. விரிசலின் ஆரம்பப் புள்ளி உள்ளாட்சி தேர்தல் என சொல்லப்படுகிறது. பிரச்சாரத்திற்கு செந்தில்பாலாஜி தரப்பிடம் தூது சென்றிருக்கிறது. ஜோதிமணியோ தட்டிக் கழித்திருக்கிறார். இதனால் அப்செட்டான அமைச்சர், அரசு விழாவில் ஜோதிமணியை தவிர்த்துள்ளார். இது மறைமுகமான பழிவாங்கல் நடவடிக்கையாக தொடர்ந்து கொண்டிருந்தது. சமயம் பார்த்து காத்திருந்தார் ஜோதிமணி. அதற்கு தூபம் போடும் விதமாக அரசு விழாவும் வந்தது.

கரூர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் முகாமை நடத்தக் கோரி ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் ஆட்சியர் பிரபு சங்கர் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நவ.25ஆம் தேதி முதல் ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அன்று இரவு அவர் அங்கேயே படுத்து உறங்கினார். ஆனால் அண்ணன் செந்தில்பாலாஜியோ அவரைக் கண்டுகொள்ளாமல் அந்த முகாமை நடத்தினார். உள்ளுக்குள்ளேயே இவ்வளவு காலமாக பொசும்பி கொண்டிருந்த பூகம்பம் இன்று வெடித்துள்ளது.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால் ஒருசிலர் (ஜோதிமணி) தங்களுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காகவும் அரசியல் மற்றும் சுய விளம்பரத்திற்காகவும் பிரச்சினை செய்கிறார்கள்” என்றார். இவ்வளவு நாளும் அரசல் புரசலாக பேசப்பட்டது, தற்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது. இதற்கு ஜோதிமணியின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


