அமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம் - திமுகவில் சலசலப்பு

 
p

அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  தியாகராஜன் பெயர் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்ட பட்டியலில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டிருக்கிறது.  இதனால் மதுரை திமுகவில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

 திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.  மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.  இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1222 இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த அக்கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது.   மதுரையில் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்க இருக்கிறார் என்று கடந்த 3ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

p

 ஆனால் தற்போது மதுரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார் என்ற பெயர் நோட்டீசிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.  நிதி அமைச்சர் பிடிஆர்க்கு பதிலாக முனைவர் ஜெயரஞ்சன் அந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பார் என்று போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளன .

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் திடீரென்று மாற்றப்பட்டு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறு பேச்சாளரை நியமித்தது மதுரை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

டெல்லியில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர் உடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகின . தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அந்த ஆடியோக்களில்,  முதல்வர் மகன் உதயநிதி ஸ்டாலின் ,மருமகன் சபரீசன் இருவரையும் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் பிடிஆர் .  இருவரும் ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி பணம் குவித்து விட்டதாகவும் , இருவரும் தான் திமுக என்ற நிலை ஆகிவிட்டது என்றும் தனது குமுறலை வெளிப்படுத்தி இருந்தார்.   ஆனால் அந்த ஆடியோக்களில் உள்ள குரல் தனது குரல் அல்ல என்று பிடிஆர் மறுத்தாலும் குரல் மாதிரி பரிசோதனைக்கு ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது,  அந்த ஆடியோ பொய்யானது என்றால் ஏன் வழக்கு தொடரக்கூடாது என்று பாஜக தரப்பில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ptr

 இந்த ஆடியோ விவகாரத்தில்,  பிடிஆரின் ஒரிஜினல் முழு ஆடியோ தன்னிடம் உள்ளது.  தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை வெளியிடுவேன் என்றும் அண்ணாமலை கூறி இருக்கிறார்.  இதன் மூலம் அந்த ஆடியோக்களில் உள்ள குரல் அமைச்சர் பிடிஆர் உடையதுதானா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.  இந்த நிலையில் அமைச்சர் பி டி ஆர் இன் பெயர் நீக்கப்பட்டு இருப்பது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ஆடியோ விவகாரத்தில் அமைச்சர் பிடிஆரை மாற்றினாலோ பதவி நீக்கம் செய்தாலோ ஆடியோவும் அந்த ஆடியோவில் அவர் சொல்லியிருப்பதும் உண்மை என்று ஆகிவிடும் என எதிர்க்கட்சிகள் கூறி இருந்த நிலையில் இலாகா மாற்றம் என்று எதுவும் செய்யாமல் தற்போது கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு இருப்பது சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.