ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களையே ஆட்டிப்படைக்கும் அமைச்சர் ஜெகதீஸ்வரி
தமிழக வெற்றிக் கழக அரசில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகவும், விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ள கு.ஜெகதீஸ்வரி தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாக கூறப்படும் மிரட்டல் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ராஜபாளையம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 18 ஊராட்சிகளுக்கு 2.11 கோடி ஒதுக்கப்பட்டதில், அதில் 37 லட்சம் ரூபாய் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சமுசிகாபுரம், மேல ராஜகுலராமன், சோழபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தவெக வெற்றி பெற்ற தொகுதி நிதியை திமுக வெற்றி பெற்ற தொகுதிக்கு ஒதுக்கியதாக சர்ச்சை வெடித்தது. பின்னர் அமைச்சர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் தினமும் 50-60 லாரிகளில் நடக்கும் கிராவல் மணல் கொள்ளையில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அக்டோபர் 1-ம் தேதி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் கயல்விழி என்பவர் தனக்கு நீதி கிடைக்க போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு வைக்க வேண்டும் என அமைச்சர் கூறியதாக குற்றம் சாட்டி வெளியிட்டதாக கூறப்படும் ஆடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது. .
இந்நிலையில் நேற்று நெல்லையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் ஜெகதீஸ்வரி, கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களான ஆர்.எஸ்.முருகன், சதீஸ் கிறிஸ்டோபர், ரெட்டியார்பட்டி நாராயணன் பங்கேற்கவில்லை. பொதுவாக அமைச்சர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில், தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் கலந்து கொள்ளலாம். அப்போதுதான் தொகுதி நலன்சார்ந்த கோரிக்கைகளை அமைச்சரிடம் பேச முடியும். இதற்கு முன்பு நடந்த பல்வேறு ஆய்வுக் கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு தொகுதி நலன் சார்ந்த விபரங்களை தெரிவித்து திட்டங்களை பெற்றுள்ளனர். ஆனால், நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க தடை போட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரியின் நடவடிக்கை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் த.வெ.க.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் ஆடியோ முதல் நிதி முறைகேடு, மணல் கொள்ளை வரை அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர், இப்போது தனது சொந்த கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கே தடை போட்டதாக வந்துள்ள செய்தி, தவெகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

