கோவா சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் உதவியுடன் பா.ஜ.க. தோற்கடிப்பதே எங்களின் இலக்கு.. எம்.ஜி.பி.

 
பா.ஜ.க.

கோவா சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் உதவியுடன் பா.ஜ.க. தோற்கடிப்பதே எங்களின் இலக்கு என்று எம்.ஜி.பி. கட்சியின் தலைவர் தீபக் தவாலிகர்  தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் தனது கட்சியை பல மாநிலங்களில் விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள  கோவாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனது தடத்தை பதித்துள்ளது. எதிர்வரும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  கோவா சட்டப்பேரவை தேர்தலுக்காக மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன்  (எம்.ஜி.பி.) திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்துள்ளது. 

தீபக் தவாலிகர்

இந்நிலையில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் தீபக் தவாலிகர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கோவாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் புதியது என்று எனக்கு தெரியும். ஆனால் நான் அதை ஒரு பிரச்சினையாக பார்க்கவில்லை. 1994ல் பா.ஜ.க. கூட கோவாவில் ஒரு புதிய கட்சியாக இருந்தது. நாங்கள் அப்போது அவர்களுக்கு ஆதரவளித்தோம். இப்போது நிலைமை மாறி விட்டது. தற்போதைய நிலையில், பா.ஜ.க.வுக்கு எங்கள் கட்சி மீது மரியாதை இல்லை. பா.ஜ.க. எங்களுக்கு பல பிரச்சினைகளை முன்வைக்கிறது. 

மம்தா பானர்ஜி

எதிர்வரும் கோவா சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் உதவியுடன் பா.ஜ.க. தோற்கடிப்பதே எங்களின் இலக்கு. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி அடுத்த வாரம் கோவாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு தொகுதி பங்கீட பார்முலாவை இறுதி செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.