அதிகாரத்தை பயன்படுத்தி காஷ்மீரை உங்களுடன் வைத்திருக்க முடியாது... மத்திய அரசை எச்சரித்த மெகபூபா முப்தி

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

அதிகாரத்தை பயன்படுத்தி காஷ்மீரை உங்களுடன் வைத்திருக்க முடியாது என்று மத்திய அரசை மெகபூபா முப்தி எச்சரிக்கை

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பேசுகையில் கூறியதாவது: சட்டப்பிரிவு 370, பிரிவு 35ஏ மற்றும் சொந்த கொடி வழங்கிய காந்திஜியின் இந்தியாவுடன் நாங்கள் செல்ல முடிவு செய்தோம். ஜம்மு காஷ்மீரை உங்களுடன் (மத்திய அரசு) வைத்திருக்க விரும்பினால், சட்டப்பிரிவு 370, பிரிவு 35ஏ மீண்டும் வழங்கி, காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கவும்.

சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம்

அதிகாரத்தை பயன்படுத்தி காஷ்மீரை உங்களுடன் வைத்திருக்க முடியாது. பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற 200 ஆண்டுகள் ஆனது. அரசியலமைப்புக்கு முரணாக 370வது பிரிவை நீக்க பா.ஜ.க.வுக்கு 70 ஆண்டுகள் எடுத்தது. எங்களுக்கு 70  மாதங்கள் ஆகலாம், ஆனால் 370வது பிரிவை திரும்ப பெறுவது மட்டுமல்லாமல் காஷ்மீர் பிரச்சினையையும் தீர்க்க இந்திய அரசை வற்புறுத்துவோம். அதற்காக நமது இளைஞர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.

மத்திய அரசு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த சட்டபிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரசேதங்களாக பிரித்தது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.