நிலத்தை மட்டுமல்ல, மக்களையும் பிரிக்கும் ஆயிரக்கணக்கான ஜின்னாக்களை காண்பீர்கள்.. பா.ஜ.க.வை தாக்கிய மெகபூபா

 
முகமது அலி ஜின்னா

நிலத்தை மட்டுமல்ல, மக்களையும் பிரிக்கும் ஆயிரக்கணக்கான ஜின்னாக்களை நீங்கள் காண்பீர்கள் என்று பா.ஜ.க.வை மெகபூபா முப்தி மறைமுகமாக தாக்கினார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி வரையறைக்காக நியமிக்கப்பட்ட ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் தனது அறிக்கையை சமர்பித்தது. இதில், ஜம்முவுக்கு கூடுதலாக 6 தொகுதிகளும், காஷ்மீருக்கு ஒரு தொகுதியும் பரிந்துரை செய்து இருந்தது. ஆனால் தொகுதி வரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் பிரிவினையை உண்டாக்கும் என்று குப்கர் மக்கள் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வரும் ஜனவரி 1ம் தேதியன்று இதற்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தது. இந்நிலையில், நிலத்தை மட்டுமல்ல மக்களையும் பிரிக்கும் ஆயிரக்கணக்கான ஜின்னாவை நீங்கள் (மக்கள்) பார்ப்பீர்கள் என்று பா.ஜ.க.வை மெகபூபா முப்தி மறைமுகமாக சாடியுள்ளார்.

பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவி மெகபூபா முப்தி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மெகபூபா முப்தி பேசுகையில் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைய, ஜவஹர்லால் நேரு, காந்திஜி, சர்தார் படேல், சர் சயீத் அகமது கான் மற்றும் அம்பேத்கர் ஜி ஆகியோருடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஜின்னாவை நாம் குற்றம் சாட்டுகிறோம்.  அவர் (ஜின்னா) நம் நாட்டை பிரித்ததாக நம்மிடம் ஒரு புகார் உள்ளது. இன்று அவரது பெயரை சொல்வதை தவிர்க்கிறோம். 

பாகிஸ்தான்

அவர் (ஜின்னா) இந்தியாவை பிரித்து, இந்து- முஸ்லிம்களை பிரித்தார் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நிலத்தை மட்டுமல்ல, மக்களையும் பிரிக்கும் ஆயிரக்கணக்கான ஜின்னாக்களை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் சுதந்திரத்துக்கு எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள். நம் அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தான்) ஒரு ஜெனரல் வந்து, அங்கு உண்மையான இஸ்லாத்தை கொண்டு வருவேன் என்று கூறினார். மதத்தை போதிக்கும் வெறுப்பை தூண்டினார். குழந்தைகளுக்கு புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கிகள் வழங்கப்பட்டது. இன்று பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் நிகழ்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.