காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறி வருகிறது.. மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
டி20 உலகப்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறி வருகிறது என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்.
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மெகபூபா முப்தி கூறியதாவது: வாஜ்பாய் காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி எனக்கு நினைவிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவுக்காகவும், இந்திய குடிமக்கள் பாகிஸ்தானுக்காகவும் ஆரவாரம் செய்தனர்.
மேலும் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் அப்போதைய இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியை பாராட்டினார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஆக்ராவில், இந்தியாவுடனான போட்டியின்போது சில இளைஞர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக உற்சாகப்படுத்தியபோது, ஒரு வழக்கறிஞர் கூட அவர்களின் வழக்கை ஏற்று நடத்த தயாராக இல்லை. அதனால் காந்தியின் இந்தியா கோட்சேவின் இந்தியாவாக மாறுவது போல் உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அண்மையில் டி20 உலகப்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றதை நம் நாட்டில் சிலர் கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த காஷ்மீரை சேர்ந்த 3 இளைஞர்கள் இந்தியாவின் தோல்வியை கொண்டாடினர். இதனையடுத்து ஆக்ரா போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.