பிரதமர் மிகவும் திமிர் பிடித்தவர்.. மேகாலயா கவர்னர்.. உண்மையை கேட்க மோடி விரும்பவில்லை.. அசாதுதீன் ஒவைசி
பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் என மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் கூறியதற்கு, ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் மிகவும் திமிர் பிடித்தவர். நம்முடைய சொந்தங்கள் (விவசாயிகள்) 500 பேர் இறந்து விட்டார்கள் என்று நான் பிரதமரிடம் சொன்ன தருணத்தில், அவர்கள் எனக்காகத்தான் இறந்தார்களா? என்று அவர் கேட்டார், அதற்கு நான் ஆம், நீங்கள் ராஜா என்பதால் என்று நான் பதிலளித்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் என்னை அமித் ஷாவை சந்திக்கும்படி பரிந்துரை செய்தார், நான் செய்தேன் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி குறித்த சத்ய பாலி மாலிக்கின் கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவத்துள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா டிவிட்டரில், இந்த மனிதர் (சத்ய பால் மாலிக்) ஜம்மு அண்டு காஷ்மீரில் அவர்களின் (பா.ஜ.க. அரசின்) தலைசிறந்த மனிதனாக இருந்தார். இப்போது தனக்கு உணவளித்த கையை கடிக்கிறார். ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் கவர்னரின் நம்பிக்கையற்ற தன்மையை சான்றளிக்க முடியும் என்று பதிவு செய்து இருந்தார்.
அதேசமயம் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், மேகாலயா கவர்னர் சத்ய பால் மாலிக்கை பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களால் 500க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தது குறித்து மாலிக் பேசியதால் கோபமடைந்தார். ஒரு கவர்னரிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் உண்மையை கேட்க பிரதமர் மோடி விரும்பவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. அவர் பாராட்டுக்களை மட்டுமே விரும்புகிறார் என்று குற்றம் சாட்டினார்.