வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யாமல் இருந்தால் இந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடையும்.. மாயாவதி
எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யாமல் இருந்தால் இந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடையும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனயைடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாயாவதி கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் பயம் அரசு இயந்திரத்தில் அவசியம். தேர்தல் ஆணையம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும். அரசு எந்திரங்களை தவறாக பயன்படுத்தாமல், வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யாமல் இருந்தால் இந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடையும்.
ஐந்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும். காவல்துறை நிர்வாகம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். உத்தர பிரதேச மக்கள் வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும்.தேர்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் எங்கள் கட்சி பின்பற்றும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.