ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைப்பு உறுதி?

 
ep

கிருஷ்ணகிரி அதிமுகவில் தற்போது நிலவும் சூழலில் ஊடகங்கள் கணிப்பு போல ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைப்பு உறுதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓபிஎஸ் அணியில் உள்ளவர்கள் இபிஎஸ் அணியை சேர்ந்த தம்பிதுரையை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிகழ்வுகளில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பதிலாக முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருவது தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் தம்பிதுரை ஈடுபட்டு வருவதாகவும் பேசப்படுகிறது.

ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தம்பிதுரையின் ஆதரவாளராக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், கட்சியிலிருந்து இபிஎஸ் ஆல் நீக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ்ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதை எடுத்து அவருக்கு ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல சூளகிரி ஒன்றிய பகுதியைச் சார்ந்த தம்பிதுரை ஆதரவாளரான மது  (எ) ஹேம்நாத் உள்ளிட்டோரும் ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் திடீரென மது  (எ) ஹேம்நாத், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் தம்பிதுரையை அண்மையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. தற்பொழுது மது (எ) ஹேம்நாத்திற்கு ஓபிஎஸ் அணியில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கே எம் ஆறுமுகம் என்பவர், ஓபிஎஸ் இன் வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தபோது பட்டாசு வெடித்து ஆதரவு தெரிவித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஓபிஎஸ்-க்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது ஓபிஎஸ் அணியில் அவருக்கு காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பதவி வழங்கி உள்ளதாக, கட்சியினர் குமுறுகின்றனர்.

இது போன்ற காரணங்களால் அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகிறதாக ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பு நிலவுகிறது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளரான கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தியின் முயற்சியால் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ஓபிஎஸ் அணியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் வேளையில், முன்னாள் சேர்மன் வெங்கடாசலம், தேவராஜ், தங்கராஜ், வெற்றிவேல், டாக்டர் ஜான் திமோத்தி, ராஜேந்திர கவுடு உள்ளிட்டோர் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். 

எனவே இபிஎஸ் ஓபிஎஸ் அணிகள் இணைப்பு உறுதி என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்த தம்பிதுரை போன்ற மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிமுகவினர் இடையே பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆதரவாளர்களிடையே சற்று தொய்வும் ஏற்பட்டுள்ளது.