சுயேட்சையாக போட்டியிடுவேன்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தோற்கடிப்பேன்.. பஞ்சாப் முதல்வரின் சகோதரர் உறுதி

 
மனோகர் சிங்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன், தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தோற்கடிப்பேன் என பஞ்சாப் முதல்வரின் இளைய சகோதரர் மனோகர் சிங் கூறியுள்ளார்.

பஞ்சாபில் 117 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப் காங்கிரஸ் 87 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, நடிகர் சோனு சூட் சகோதரி மால்விகா சூட் மற்றும் பஞ்சாபின் சர்ச்சைக்குரிய பாடகர் சித்து முஸ்ஸேவாலா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

சரண்ஜித் சிங் சன்னி

அதேசமயம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் இளைய சகோதரர் மனோகர் சிங்குக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு குடும்பம் ஒரு டிக்கெட் என்ற காங்கிரஸின் கொள்கை காரணமாக மனோகர் சிங்குக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மனோகர் சிங் கடும் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் சுயேட்சையாக போட்டி போவதாக மனோகர் சிங் அதிரடியாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ்

மனோகர் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பஸ்ஸி பத்தானா சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் என்னிடம் சுயேட்சையாக போராடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் கூறியதை அப்படியே பின்பற்றுவேன். பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று தெரிவித்தார். மனோகர் சிங் சுயேட்சையாக போட்டியிடுவது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.