மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெட்பாவ் ஹாக்கிப் பா.ஜ.க.வில் இணைந்தார்

 
லெட்பாவ் ஹாக்கிப் (காவி துண்டு)

மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வும், மாநில அமைச்சருமான லெட்பாவ் ஹாக்கிப் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள்  கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில் லெட்பாவ் ஹாக்கிப்  உள்பட 2 பேர் அமைச்சராக உள்ளனர்.  லெட்பாவ் ஹாக்கிப் அம்மாநில இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். இவர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

தேசிய மக்கள் கட்சி

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கொன்ராட் சங்கா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தனித்து போட்டியிட திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், அம்மாநில அமைச்சருமான லெட்பாவ் ஹாக்கிப் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இது தேசிய மக்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.

பா.ஜ.க.வில் இணைந்த பிறகு லெட்பாவ் ஹாக்கிப் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் வடகிழக்கு பகுதியும், மணிப்பூரும் வளர்ச்சியடையும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார். லெட்பாவ் ஹாக்கிப் பா.ஜ.க.வில் இணைந்தது தொடர்பாக தேசிய மக்கள் கட்சி உடனடியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.