இங்க வேண்டாம், டெல்லி மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு சென்று போராட்டம் நடத்துங்க.. மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில், நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டம் நடத்தியவர்களிடம், டெல்லி மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு சென்று போராட்டம் நடத்துங்க என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.

முகமது நபிக்கு எதிராக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். முகமது நபி விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் சமானிய மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

நுபுர் சர்மா

இதனையடுத்து, போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு, டெல்லி மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு சென்று போராட்டம் நடத்துமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். கொல்கத்தாவில் மாநில தலைமை செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சில இடங்களில் காலை முதல் சாலை மறியல் நடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் எதுவும் நடக்காததால், முழு அடைப்பு போராட்டத்தை கைவிடுமாறு பொதுமக்களின் சார்பாக நான் உங்களிடம் (போராட்டக்காரர்கள்) கேட்டுக் கொள்கிறேன். டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துங்கள், அங்கு பா.ஜ.க. அரசு உள்ளது. குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்துக்கு செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.