சேரிட்டியின் வங்கி கணக்குகள் முடக்கம்.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு

 
மம்தா

அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியது என்ற மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டிவிட்டரில், மத்திய அமைச்சகம் கிறிஸ்துமஸ் அன்று நம் நாட்டில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கியது என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் (அன்னை தெரசா சேரிட்டி) 22 ஆயிரம் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்து இல்லாமல் தவித்து வருகின்றனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்யக்கூடாது என்று பதிவு செய்து இருந்தார்.

மிஷனரீஸ் ஆப் சேரிட்டி

மம்தாவின் இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேசமயம் தங்களது வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை என்று அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சேரிட்டி தெரிவித்தது. அந்த அமைப்பின்  செய்தி தொடர்பாளர் சுனிதா குமார் கூறுகையில், இது தொடர்பாக எங்களிடம் எதுவும் (வங்கி கணக்குகள் முடக்கம்) கூறப்படவில்லை. இதை பற்றி நான் அறியவே இல்லை. இந்திய அரசு எங்களிடம் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. வங்கி பரிவர்த்தனைகள் சிறப்பாக நடைபெறுகிறது. எல்லாம் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம்

மேலும், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன என்று மம்தாவின் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிஷனரிஸ் ஆப் சேரிட்டியின் எப்.சி.ஆர்.ஏ. பதிவை புதுப்பிப்பதற்கான வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பம், எப்.சி.ஆர்.ஏ. 2010 மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுற விதிகள் (எப்.சி.ஆர்.ஆர்.) 2011இன் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததற்காக கடந்த 25ம் தேதியன்று நிராகரிக்கப்பட்டது. இந்த புதுப்பித்தல் மறுப்பை மறுபரிசீலனை செய்ய மிஷனரீஸ் ஆப் சேரிட்டியிடம் இருந்து கோரிக்கை அல்லது திருத்த விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை. அந்த சேரிட்டியின் எந்த வங்கி கணக்கும் முடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.