தலைமை செயலாளர், டி.ஜி.பி.யை கவர்னர் மிரட்டுகிறார்.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யை கவர்னர் மிரட்டுகிறார் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், அம்மாநில கவர்னர் ஜெகதீப் தங்கரும் எலியும் பூனையும் போல் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கவர்னர் ஜெகதீப் தங்கரின் டிவிட்டர் கணக்கை பிளாக் செய்து விட்டேன்.
கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் பொறுமையாக தவித்து வருகிறோம். பல கோப்புகளை அவர் கிளியர் செய்யவில்லை. ஒவ்வொரு கோப்பையும் நிலுவையில் வைத்திருக்கிறார். கொள்கை முடிவுகள் குறித்து அவர் எப்படி பேசுவார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு குறைந்தது நான்கு கடிதங்களாவது எழுதியுள்ளேன். கவர்னர் ஜெகதீப் தங்கர் போன்களை ஒட்டுக் கேட்கிறார்.
மாநிலத்தின் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குனர் ஜெனரல் ஆகியோரை மிரட்டுகிறார். பிரதமர் ஏன் அவரை (ஜெகதீப் தங்கர்) நீக்கவில்லை?. கவர்னர் மாளிகையிலிருந்து பெகாசஸ் செயல்படுகிறது. அவர் தொலைபேசிகளை ஒட்டு கேட்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். மம்தாவின் செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன், கவர்னர் ஜெகதீப் தங்கர் மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்னரின் செயல்பாடுகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 159வது பிரிவை பதிவேற்றம் செய்து இருந்தார்.