உயிரிழந்த 700 விவசாயிகளின் தரவு இல்லை என்பது விவசாயிகளை அவமதிப்பதாகும்.. மல்லிகார்ஜூன் கார்கே

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டததில் உயிரிழந்த 700 விவசாயிகளின பதிவு இல்லை என்பது விவசாயிகளை அவமதிப்பதாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த ஒராண்டுக்கு மேலாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிர் இழந்துள்ளதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்தன. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

விவசாயிகள் போராட்டம்

அதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதிலளிக்கையில், விவசாயிகள் போராட்டத்தில் எந்த விவசாயியும் உயிர் இழந்ததாக அரசின் பதிவேட்டில் இல்லை. விவசாயிகள் யாரும் போராட்டத்தில் உயிரிழக்காதபோது, அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரின் இந்த பதிலை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது: இது விவசாயிகளை அவமதிப்பதாகும்.

நரேந்திர சிங் தோமர்

3 வேளாண் சட்டங்களுக்கு ஏதிரான போராட்டங்களின்போது 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இது குறித்து எந்த பதிவும் அவர்களிடம் இல்லை என்று மத்திய அரசு எப்படி சொல்ல முடியும். அரசாங்கத்திடம் 700 பேரின் பதிவு இல்லை என்றால், தொற்றுநோய் காலத்தில் லட்சக்கணக்கான மக்களின் தரவுகளை அவர்கள் (மத்திய அரசு) எவ்வாறு சேகரித்தார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர், ஆனால் அரசாங்கத்தின் கூற்றுப்படி, 4 லட்சம் பேர் மட்டுமே கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.