எதிர்காலத்தில் வேறுவடிவத்தில் வரும்.. மோடி அப்படி கூறியதற்கு இதுதான் அர்த்தம்.. மல்லிகார்ஜூன் கார்கே

 
மல்லிகார்ஜூன் கார்கே

வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என்று மோடி கூறியதற்கு, எதிர்காலத்தில் இந்த சட்டங்கள் வேறு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று அர்த்தம் என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரலஹாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட மொத்தம் 31 கட்சிகளை சேர்ந்த 42 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றம்

அனைத்து கட்சி கூட்டத்தில், கோவிட்டால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை உருவாக்க வேண்டும், எரிபொருள் விலை, பணவீக்கம் உள்பட பல்வேறு விஷயங்களை பல்வேறு கட்சிகள் எழுப்பியதாக தகவல். அனைத்து கட்சி கூட்டம் முடிவடைந்தபிறகு, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களில் முக்கியமானவரான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தோம்.

இழப்பீடு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். பிரதமர் மோடி இன்று (நேற்று) கூட்டத்தில் பங்கேற்பார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் சில காரணங்களால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. வேளாண் சட்டங்களை அரசாங்கம் திரும்ப பெற்றுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு, எதிர்காலத்தில் இந்த சட்டங்கள் வேறு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.