காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் 5 நட்சத்திர மேகாலயாவின் அடித்தளமாக இருக்கும்.. மல்லிகார்ஜூன் கார்கே

 
காங்கிரஸ்

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் 5 நட்சத்திர மேகாலயாவின் அடித்தளமாக இருக்கும் எனறு அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் பெருமையாக தெரிவித்தார்.

மேகாலயாவில் 60 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மேகாலயா சட்டப்பேரவை  தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டார்.

வேலைவாய்ப்பு

மேகாலயா தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில்,  எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் வீட்டில் ஒருவருக்கு வேலை, அனைவரும் இலவச மருத்துவம், 12ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பிபிஎல் குடும்பங்களுக்கு இலவச கூரை பொருட்கள், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் காலாண்டுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டிவிட்டரில், அன்புள்ள மேகாலயா மக்களே, இந்திய தேசிய காங்கிரஸ் மேகாலயா உங்கள் எதிர்காலத்திற்காக 5 உறுதியான வாக்குறுதிகளை அளித்துள்ளது. எங்கள் அர்ப்பணிப்பு ஒரு 5 ஸ்டார் மேகாலயாவின் அடித்தளமாக இருக்கும். பெண்களுக்கு அதிகாரமளித்தல், மின்வெட்டு இல்லா மேகாலயா, போதைப்பொருள் இல்லா மேகாலயா, வேலையில்லாத் திண்டாட்டம் இல்லா மேகாலயா, ஊழல் இல்லாத மேகாலயா என பதிவு செய்துள்ளார்.