திமுகவில் தலைகீழ் மாற்றம்! கனிமொழிக்கு பொதுச்செயலாளர் பதவி?
இடைத்தேர்தல் காரணமாக தள்ளிப்போன திமுக நியமனங்கள் இப்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன. அறிவாலயத்தில் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இளைஞரணியில் மறுசீரமைப்பு, உதயநிதியுடன் தொடர் ஆலோசனை, மருத்துவ அணியிலும் மாற்றத்திற்கான பேச்சு என அறிவாலயமே பரபரப்பாகியுள்ளது.
தகவலின்படி நவம்பர் 15க்குள் 110 மாவட்டங்களுக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படலாம். புதிய முகங்களுக்கு வாய்ப்பு, பழைய முகங்களுக்கு ஓரங்கட்டல் என பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட பெரிய அதிர்ச்சி பொதுச்செயலாளர் பதவியில் நடக்கிறது. துரைமுருகன் ராஜினாமா செய்வாரா? அந்த இடத்திற்கு கனிமொழி வருவாரா? என்ற கேள்வி அறிவாலய வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மகளிரணி சார்பில் தொடர் ஆர்ப்பாட்டங்கள், கட்சிக்குள் அவருக்கு அதிகரித்து வரும் ஆதரவு என அனைத்தும் கனிமொழிக்கான பெரிய புரமோஷனுக்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது.
திமுக வரலாற்றில் முதல் பெண் பொதுச்செயலாளர் என்ற புதிய அத்தியாயம் தொடங்குமா என அனைவரும் உற்று நோக்குகின்றனர். ஒரு பக்கம் கனிமொழி என்றால், மறுபக்கம் உதயநிதிக்கும் அடுத்தகட்ட புரமோஷன் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. தந்தையின் தலைமையில் மகனுக்கு அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

