"பாரதி பார்க்கில் கிருஷ்ணர் சிலை உடைப்பு; அந்த விஷமி யார்?" - வானதி சீனிவாசன் ஆவேசம்!

 
வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபா காலனியில், பாரதி பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா வளாகத்தில் கிருஷ்ணர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இச்சூழலில் நேற்று காலை பூங்கா ஊழியர்கள் வழக்கம் போல் பூங்காவைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதையோ அடித்து உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, கிருஷ்ணர்சிலை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர். சிலையின் முழங்கால் பகுதிக்கு மேலே இருந்த பாகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் பூங்காவில் திரண்டனர். 

Image

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பாரதி பூங்காவுக்கு வருகை தந்து உடைக்கப்பட்ட சிலையைப் பார்வையிட்டார். சாயிபாபாகாலனி காவல் துறையினரும் அங்கு வந்து விசாரித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.  இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சாயிபாபா காலனி பாரதி பார்க் வளாகத்தில், பல வருடங்களான கிருஷ்ணர் சிலை உள்ளது. ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், காலையில் கிருஷ்ணரை வணங்கிவிட்டு நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். 

இச்சூழலில் இங்குள்ள கிருஷ்ணர் சிலையை அடையாளம் தெரியாத நபர் உடைத்துள்ளார். இச்செயல் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்டவரை கோவை மாநகர காவல்துறை நிர்வாகத்தினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்து முன்னணி மாவட்ட செய்தித்தொடர்பாளர் தனபால் கூறுகையில், சிலை உடைப்பைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.