"இன்னும் ஏன் மூச்சு விட மாட்றீங்க ஸ்டாலின்?" - ஆவேசமான குஷ்பு சுளிர் கேள்வி!

 
குஷ்பு

அரியலூரில் உள்ள தனியார் கிறிஸ்துவ கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பள்ளி அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இச்சூழலில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தங்கும் விடுதியில் தொடர்ந்து வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களிடம் தான் நச்சுத்தன்மை வாய்ந்த மருந்தை உட்கொண்டதாக அந்த மாணவி கூறியுள்ளார். அம்மாணவி பள்ளியில் மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் மறுத்ததால் கொடுமைப்படுத்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் வதந்தி ப்ரவியது.

இந்நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர் ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். இருப்பினும் அவர் இறப்பதற்கு முன்னர் மரண வாக்குமூலமும் கொடுத்தார். அதில் ஒரு வார்த்தை கூட மதமாற்றம் குறித்து அவர் குறிப்பிடவில்லை. ஆனால் தமிழக பாஜகவினர், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மாணவியை மதமாற்றம் செய்ய முனைந்ததாகக் கூறி அரசியல் செய்து வருகின்றனர். அந்த வகையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, "எல்லோரின் வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். இழந்தவர்களுக்கு மட்டும்தான் வலியும் வேதனையும் தெரியும். இதுவரை இந்த தற்கொலை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்? மதம் மாற்றம் குறித்து இறந்த குழந்தையே வீடியோ வாக்குமூலம் கொடுத்தும் இதுவரை ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதுதான் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா? எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் திருமாவளவன் எங்கே? 

காங்கிரஸ் கட்சி

அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்றால் அந்த குழந்தை பேசியது பொய்யா? சிறுமியின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியே கிடையாது. தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது கூறமுடியுமா? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிடுவாரா? தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணை வேண்டும்” என்றார்.