மரியாதை கெட்டுவிடும்! பாஜகவினருக்கு கே.எஸ். அழகிரி மிரட்டல்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது ஆனால் அது போன்ற வதந்திகளை பாஜகவினர் பரப்பினால் மரியாதை இழக்க நேரிடும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் நடக்கும் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், ரஞ்சன்குமார் உள்பட 50 பேர் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “மத்திய அரசின் பொருளாதாரம், வெளியுறவு, பாதுகாப்பு செயல் இழப்பு தன்மை குறித்த பேரணி ஜெய்பூரில் நடக்கிறது. இதில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.
எதிர்கட்சி என்றதால் குறை சொல்லலாம். ஆனால் குறைகளில் பொருள் இருக்க வேண்டும். பா.ஜ.க. மீது காங்கிரஸ் கட்சி குறை சொல்வது பொருள் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த போது காங்கிரஸ் கட்சி மானியம் தந்து குறைவாக விற்றது. ஆனால் கச்சா எண்ணெய் அதிக விலைக்கு விற்பது தவறு. மோடி கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு பயன் இல்லாத திட்டங்கள். தமிழக அரசு மீது பா.ஜ.க. குறை சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் பெட்ரோல் விலை ரூ.3 குறைத்து உள்ளனர். முதலமைச்சர் கடுமையாக உழைக்கிறார் என்பது யாரும் மறுக்க முடியாது. அரசில் வெளிப்படைத் தன்மை இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு பாதுக்காக்கப்படுகிறது.
சொந்த கட்சிக்காரர்களே தவறு செய்தாலும் அவர்களை முதலமைச்ச்சர் கண்டிக்கிறார். இவை எல்லாம் பாராட்டப்பட வேண்டியது. ஏதேனும் தவறு நடந்தால் தோழமை கட்சியாக இருந்தாலும் நாங்களே சொல்லுவோம். ஆனால் பா.ஜ.க., அதிமுக செய்வது அரசியல். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மோடியை எதிர்த்தது, அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும், ஸ்டாலினை எதிர்த்து போராட்டம் செய்வதற்கு அவரா காரணம்? யார் காரணமோ அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அதிமுக புறக்கணிக்கப்பட்டதற்கு காரணம் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்தது தான். இதை அதிமுக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் காவல்துறை நன்றாக செயல்படுகிறது. திமுகவில் எந்த அமைசரும், மாவட்ட செயலாளரும் போலீஸ் நிலையத்திலோ அரசு அலுவலகத்திலோ சட்டத்திற்கு புறம்பாகவோ செயல்பட முடியாது. பா.ஜ.க. திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகி விட்டாது. இதனால் பா.ஜ.க இருக்கிற மரியாதையும் இழப்பார்கள். நகர்புற தேர்தலுக்காக விருப்ப மனு வாங்கப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும்” எனக் கூறினார்.