கூடுதல் இடங்களும், ஆட்சியில் பங்கும் வேண்டும் - கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் உள்ள சூழலில், இந்த கூட்டணி 2026 சட்டசபை தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது திமுக - காங்கிரஸ் தலைவர்கள் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. காரணம் கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா திமுகவில் இணைந்து விட்டதாகவும், தமிழகம் தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி எதிர் வினையாற்றி இருந்தார். கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஜோதிமணி எக்ஸ் தளத்த்ல் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவும், தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சியை காட்டுவதற்காகவும், வாக்கு வங்கியை நிரூபிப்பதற்காகவும் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம் என பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் பேட்டியளித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஒரு காலத்தில் திமுக- காங்கிரஸ் சரிசமமான இடங்களில் போட்டியிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களும், ஆட்சியில் பங்கும் வேண்டும். திமுகவிடம் கூடுதல் தொகுதி தாருங்கள் என கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. பசிக்கிறது இன்னும் கொஞ்சம் சோறு தாருங்கள் என தாயிடம் குழந்தை கேட்பதை போல் தான் கூடுதல் தொகுதி கேட்பதும்” எனக் கூறியிருக்கிறார்.


