திமுகவிலும் கூவத்தூர் ஸ்டைல் - சொகுசு ஓட்டல்களில் நிர்வாகிகள் அடைத்து வைப்பு

அதிமுகவின் கூவத்தூர் ஸ்டைலை திமுகவும் பின்பற்ற ஆரம்பித்து விட்டது. மதுரை திமுக நிர்வாகிகள் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் . சகல வசதிகளும் உள்ளேயே இருப்பதால் அந்த நிர்வாகிகளும் வெளியே வர விருப்பமில்லாமல் ஹோட்டலுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். சாதாரண நகரச் செயலாளர் தேர்தலுக்கு இப்படியா என்று பரபரப்பு எழுந்திருக்கிறது.
திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் மீதான பரிசீலனை துவங்கியிருக்கிறது. 72 மாவட்ட செயலாளர் பதவிகளில் சென்னை, மதுரை, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கடும் போட்டி நிலவுகிறது. மதுரையில் கட்சி தேர்தலை போல் இல்லாமல் இரண்டு அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கை நிறைவுக்கும் களமாக மாறி இருக்கிறது. இதனால் வட்டம் மற்றும் பகுதி செயலாளர்களுக்கு லட்சங்களில் அள்ளிக் கொடுத்து கவனித்து வருகின்றனர் .
அப்படி இருந்தும் நிர்வாகிகள் மாறிவிடக்கூடாது என்பதற்காக லட்சங்களில் கவனிப்பு முடிந்ததுமே ரயில் மூலமாகவும் விமானம் மூலமாகவும் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் அழைத்துச் சென்று சொகுசு ஹோட்டல்களில் அவர்களை தங்க வைத்துள்ளனர். இதனால் மதுரையில் திமுக நிர்வாகிகளே இல்லாமல் காலியாக இருக்கின்றது.
மதுரையில் திமுக செயலாளர் பதவிக்கு தளபதி எம்எல்ஏ, இளைஞர் அணி செயலாளர் அதலை செந்தில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தங்கள் தரப்பில் ஆதரவு நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூவத்தூர் ஸ்டைலில் ஹோட்டல்களில் தங்க வைத்து கவனித்து வருகின்றனர்.
மதுரை நகர் திமுகவில் வட்டச் செயலாளர்கள் 71 பேர், பகுதி செயலாளர்கள் 18 பேர் உள்ளார்கள். ஒரு பகுதிக்கு நாலு அல்லது ஐந்து என்கிற எண்ணிக்கையில் 70-க்கும் மேற்பட்ட மாவட்ட பிரதிநிதிகள் உள்ளனர் . தேர்தல் நடந்தால் வட்டச் செயலாளர்கள் ஆதரவுடன் பகுதி மாவட்ட செயலாளர்கள் வாக்களிப்பார்கள். தளபதிக்கு 51 வட்ட செயலாளர்கள் , 6 பகுதி செயலாளர்கள், அதலை செந்திலுக்கு 15 மாவட்ட செயலாளர்களும் 12 பகுதி செயலாளர் ஆதரவாக உள்ளனர். மாவட்ட பிரதிநிதிகள் ஆதரவு இருவருக்கும் சமமாகவே இருக்கிறது.
தளபதி தரப்பில் புதுச்சேரியிலும், அதலை செந்தில் தரப்பில் சென்னை மாமல்லபுரம் சொகுசு ஹோட்டல்களிலும் ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது வெளியேற அனுமதி இல்லை. ஹோட்டலுக்குள்ளேயே சகல வசதிகளும் இருப்பதால் அவர்களும் வெளியேற விருப்பமில்லாமல் சொகுசை அனுபவித்து வருகின்றனர்.
அதிமுகவில் நடந்த கூவத்தூர் ஸ்டைல் திமுகவில் நடப்பது கட்சியினரிடையே சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.