ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. செய்த பணிகள் என்னை கவர்ந்தன... பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர்
உத்தரகாண்டில் தெஹ்ரி மற்றும் உத்தரகாசியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. செய்த பணிகள் என்னை கவர்ந்தன என்று பா.ஜ.க.வில் இணைந்த உத்தரகாண்ட் காங்கிரஸின் முன்னாள் தலைவர் கிஷோர் தெரிவித்தார்.
உத்தரகாண்டில் 70 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த புதன்கிழமையன்று உத்தரகாண்ட் காங்கிரஸின் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாயை, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கட்சியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றியது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அடுத்த நாளே (நேற்று) கிஷோர் உபாத்யாய் பா.ஜ.க.வில் இணைந்தார். கிஷோர் உபாத்யாய் பா.ஜ.க.வில் இணைவதற்கு முன், கிஷோர் இப்போது புதிதாக ஏதாவது செய்வார். பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தெரிவித்தார். நேற்று காலை டேராடூனில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்துக்கு கிஷோர் உபாத்யாய் சென்றார். பா.ஜ.க.வில் இணைந்த பிறகு கிஷோர் உபாத்யாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் மட்டுமே உத்தரகாண்டின் வளர்ச்சி சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

உத்தரகாண்ட் மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற நான் பணியாற்ற விரும்புகிறேன். தெஹ்ரி மற்றும் உத்தரகாசியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. செய்த பணிகள் என்னை கவர்ந்தன. பா.ஜ.க.வில் அங்கம் வகிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய பிரகலாத் ஜோஷிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


