ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை, கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமையும்.. கீர்த்தி ஆசாத்

 
திரிணாமுல் காங்கிரஸ்

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை. கோவாவில் அடுத்த 5 ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கீர்த்தி ஆசாத் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவா திரிணாமுல் காங்கிரஸின் பொறுப்பாளர் கீர்த்தி ஆசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2022 கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள் குறித்து உள்ளிட்ட கேள்விகளுக்கு கீர்த்தி ஆசாத் வெளிப்படையாக பதில் அளித்தார். கீர்த்தி ஆசாத் கூறியதாவது: ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் வரும் போது திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

கீர்த்தி ஆசாத்

அவர்கள் (திரிணாமுல் காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள்) செய்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். குறைந்தபட்சம் எங்களுடன் யார் நிற்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். நம்முடன் இருக்க போகிறவர்கள் சந்தர்ப்பவாதிகள் அல்ல. எல்லாம் சரியான இடத்தில் இருக்கும். கோவாவில் முதல் 3 தேர்தல்களில் பா.ஜ.க. செய்ததையும், முதல் நான்கு தேர்தல்களில் காங்கிரஸ் செய்ததையும் ஒப்பிட்டு பார்த்தால், அவர்களை விட 800 மடங்கு சிறப்பாக செய்துள்ளோம்.

காங்கிரஸ்

அவர்களுக்கு (பா.ஜ.க., காங்கிரஸ்) ஒரு சதவீத வாக்கு கூட இல்லை. எங்களுக்கு (திரிணாமுல் காங்கிரஸ்) 8.7 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். எதிர்வரும் கோவா உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு கீர்த்தி ஆசாத் பதில் அளிக்கவில்லை. கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கிரண் கண்டோல்கர் உள்பட பல தொண்டர்கள் அந்த கட்சியிலிருந்து அண்மையில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.