அது அவர்கள் விருப்பம் தான்.. ஆனா ஹிஜாப் அணியும் இடம் பள்ளிகள் அல்ல - பிரியங்காவுக்கு குஷ்பு பதிலடி..

 
Priyanka Gandhi  - Khushbu

பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என பிரியங்கா காந்தி கூறியதற்கு,  நீங்கள்  என்ன உடையை அணிய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் இடம் பள்ளிகள் இல்லை என்றும் பாஜக செயற்குழு  உறுப்பினர் குஷ்பு பதிலளித்திருக்கிறார்.

கர்நாடகாவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப்  விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது  தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.   அந்தவகையில் காங்கிரஸ் தலைவர்  பிரியங்கா காந்தி,  பிகினியோ.., முக்காடோ.., ஜீன்ஸோ.. அல்லது  ஹிஜாப்போ., அவர்கள் என்ன அணிய வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு.  பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

hijab

 இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் பற்றியது.   விதிகள் என்பது  அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காக.  இந்த விவகாரத்தை வைத்து  அரசியலில் ஈடுபடுபவர்கள்  அவமானத்திற்குரியவர்கள். ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

khushbu

மற்றொரு ட்வீட்டில் , “ நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட நான் பார்த்ததில்லை.  யாரையும்  குறை கூறவில்லை. திடீரென உங்கள் மதத்தை பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என கூறுவது எதற்காக?? பள்ளிகளுக்கு என விதிமுறைகள்  இல்லையா?” என்று பதிவிட்டிருக்கிறார்.


தொடர்ந்து, “எதிர்க்கட்சிகள் ஹிஜாப் விவகாரத்தில் ஏன் இப்படி அலறுகிறார்கள்? வெற்று பாத்திரங்கள் சத்தம் போடுகின்றன..  

பள்ளி என்பது நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் இடம் அல்ல. இது ஒழுக்கம் நிறைந்த இடம். ஒவ்வொரு கல்வி நிறுவனமும், ஒற்றுமையையும் மரியாதையையும்  காட்ட விதிமுறைகளை கொண்டிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அல்லாது  வெளியில் நீங்கள்  என்ன உடை அணிந்து கொள்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். ஆனால்  பள்ளிகளில் நடத்தை விதிகளை மதிக்க வேண்டும். ” என்று தெரிவித்திருக்கிறார்.