கிருஷ்ணர் குறித்து பேசியதற்கு அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும்.. கேசவ் பிரசாத் மவுரியா வலியுறுத்தல்

 
அகிலேஷ் யாதவ்

கிருஷணர் குறித்து பேசியதற்கு அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வலியுறுத்தினார்.

சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தனது தேர்தல் பிரச்சாரங்களில் பகவான் கிருஷ்ணரை குறிப்பிட்டு பேசி வருகிறார். ராம ராஜ்ஜியத்தை நிறுவ மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என எனது கனவில் வந்து பகவான் கிருஷ்ணர் என்னிடம் சொன்னார் என்று தெரிவித்தார். இதற்கு உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பதிலடி கொடுத்துள்ளார்.

கேசவ் பிரசாத் மவுரியா

கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், மதத்தை மூடநம்பிக்கை என்று கூறிவிட்டு, கிருஷ்ணர் குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இம்ரான் மசூத்தை சமாஜ்வாடி கட்சியில் சேர்த்ததன் மூலம், தேர்தலில் வெற்றி பெற குண்டர்களையும், குற்றவாளிகளையும் கொண்டு வருவது அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது என்று தெரிவித்தார்.

பகவான் கிருஷ்ணர்

அண்மையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், நான் இங்கு மின் திட்டத்தை துவக்கி வைக்கும்போது, லக்னோவில் சிலர் கனவு காண்கிறார்கள். அவர்கள் கனவில் கிருஷ்ணர் வந்து, அவர்களின் தோல்விகளை கண்டு கண்ணீர் வடிக்க சொல்வார். அவர்களால் செய்ய முடியாத பணி, அதை பா.ஜ.க. அரசு செய்கிறது என்று அகிலேஷ் யாதவை மறைமுகமாக சாடினார்.