நீங்கள் எவ்வளவு உயர்ந்த நபராக இருந்தாலும், சட்டம் உங்களை விட மேலானது... கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

 
கேரள உயர் நீதிமன்றம்

கேரளாவில் ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக கொடிக்கம்பங்கள் அமைத்த விவகாரத்தில், நீங்கள் எவ்வளவு உயர்ந்த நபராக இருந்தாலும், சட்டம் உங்களை விட மேலானது, விதிமீறலில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரளாவில் சட்டவிரோதமாக கொடிக்கம்பங்கள் எதுவும் அமைக்கக்கூடாது என்ற உத்தரவை, மாநிலத்தில் ஆளும் கட்சியினர் மீறியதை நீதிமன்றம் கண்டறிந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறியதாவது: யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட இல்லை.

பினராயி விஜயன்

நீங்கள் எவ்வளவு உயர்ந்த நபராக இருந்தாலும், சட்டம் உங்களை விட மேலானது. சட்டங்களையும் , அரசாங்கத்தையும் புரிந்து கொள்ளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிக பொறுப்புக்கூற வேண்டும். கொடியின் நிறத்தை பற்றி நான் கவலைப்டவில்லை. இங்கே அது சிவப்பு. இது அப்பட்டமான மீறல். சாதாரண மக்களோ அல்லது ஆட்சியில் இல்லாதவர்களோ அல்லது எதிர்க்கட்சியில் இருப்பவர்களோ இதனை செய்தால் புரிந்து கொள்ள முடியும்.

கொடி கம்புகள்

ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை செய்ய வேண்டுமா?. என்று மாநில அரசிடம் கேள்வி கேட்டார். மேலும்,  சட்டவிரோதமாக கொடிக் கம்பங்களை அமைப்பவர்கள் மீது எந்த சார்பு இல்லாமல் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் பிணைக்கவோ அல்லது சங்கி என்று சொல்லவோ சிலர் முயற்சிக்கின்றனர். அத்தகைய முயற்சிகளால் என்னையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ பயமுறுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.