பல்கலைக்கழக செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகம்.. என்னால் வேலை செய்ய முடியாது.. கேரள கவர்னர் பகீர் தகவல்

 
ஆரிப் முகமது கான்

கேரளாவில் பல்கலைக்கழக செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளதால், இது போன்ற சூழலில் என்னால் வேலை செய்ய முடியாது என்று அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் அரசியல் நியமனங்கள் தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்து கடந்த 8ம் தேதியன்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கடிதம் எழுதினார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதை நான் காண்கிறேன் இது போன்ற சூழலில் என்னால் வேலை செய்ய முடியவில்லை என்று கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள பல்கலைக்கழகம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதை நான் காண்கிறேன், இந்த சூழலில் என்னால் வேலை செய்ய முடியாது. பல்கலைக்கழகத்தின் சுயாட்சி முற்றிலும் பறிக்கப்படுகிறது. வேறு சில அதிகாரங்களுக்கு எதிராக உங்கள் அதிகாரத்தை வலியுறுத்தும்போது மோதல் வரும்.

பினராயி விஜயன்

எனவே நீங்கள் (பினராயி விஜயன்)  ஒரு அவசர சட்டத்தை (பல்கலைக்கழக வேந்தரின் அதிகாரங்களை முதல்வரிடம் ஒப்படைப்பதற்கான  அவசர சட்டம்) கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டேன். நீங்கள் வேந்தராகலாம், யாரும் வேந்தராக வரட்டும். ஆனால் என்னை பொறுத்தவரையில் இது போன்ற அரசியல் தலையீடுகளை பார்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.