குஜராத்தில் ஒரு புறம் பா.ஜ.க.வின் 27 ஆண்டு கால தவறான ஆட்சி, மறுபுறம் ஆம் ஆத்மியின் புதிய அரசியல்... அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

எதிர்வரும் குஜராத் தேர்தலில் மக்களின் முன் ஒரு புறம் பா.ஜ.க.வின் 27 ஆண்டு கால தவறான ஆட்சி உள்ளது. மறுபுறம் ஆம் ஆத்மியின் புதிய அரசியல் உள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக கடந்த சனிக்கிழமையன்று குஜராத் சென்றார். கடைசி நாளான நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  குஜராத் தேர்தல் ஆம் ஆத்மிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நடக்கும். குஜராத் காங்கிரஸ், குஜராத் பா.ஜ.க.வுடன் இணைய போகிறது. பா.ஜ.க.-காங்கிரஸின் ஐ லவ் யூ-ஐ லவ் யூ முடிவுக்கு வரும். ஒரு புறம் பா.ஜ.க.வின் 27 ஆண்டு கால தவறான ஆட்சி உள்ளது. மறுபுறம் ஆம் ஆத்மியின் புதிய அரசியல் உள்ளது. எங்கள் முதல் வாக்குறுதி மின்சாரம் வழங்குவது. 

பா.ஜ.க.

குஜராத்தில் மக்கள் துயரத்தில் உள்ளனர். மின் கட்டணங்கள் மிக அதிகம். டெல்லியில் இலவச மின்சாரம் வழங்கினோம். பஞ்சாபில் சுமார் 25 லட்சம் வீடுகள் சமீபத்தில் மின்கட்டணத்தை பூஜ்யமாக பெற்றுள்ளன. விரைவில், பஞ்சாபில் மொத்தம் 51 லட்சம் குடும்பங்கள் பூஜ்ய பில்களை (மின் கட்டணம் செலுத்த வேண்டாம்) பெறும். குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வோம். முந்தைய ஆண்டின் பில்களையும் (மின் கட்டணங்கள்) நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். இங்குள்ள இளைஞர்கள் வாழ்வாதாரம் இல்லாததை குறை கூறுகின்றனர். சில வருடங்களில் டெல்லியில் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளோம். இங்கு வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கியிருந்தோம். அது நடக்கும் வரை வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்  வழங்கப்படும். 

ஆம் ஆத்மி

பா.ஜ.க. தனது நண்பர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பா.ஜ.க. ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது, அவர்கள் (கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள்) பா.ஜ.க. தொண்டுக்காக எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டும். குஜராத்தில் ஆம் ஆத்மி புகழ் அதிகரித்து வருகிறது. இங்கு இலவச கல்வி, சுகாதாரம், மின்சாரம் வழங்க வேண்டுமா என்று மக்களிடம்  கேட்டேன்.  99 சதவீதம் பேர் இலவச கல்வி வேண்டும் என்றும், 97 சதவீதம் பேர் மருத்துவத்தில் இலவச சிகிச்சை வேண்டும் என்றும், 91 சதவீதம் பேர் இலவச மின்சாரம் வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.