#BREAKING கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்க கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
கட்சி பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் போராட்டம் ஆர்பாட்டத்திற்கு நடத்த அனுமதி மறுப்பது ஏன்? தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர பிரகடனம் செய்துவீட்டீர்களா? சீப்பை மறைத்து வைத்துவிட்டதால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் அதற்கு எதிராக போராட்டம் செய்வோம்” எனக் கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக நாளேடான முரசொலி, “தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்.... மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமைக்கு இலக்கணம் அல்ல. தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா? என அவர் பேசியதை தடுக்கவில்லை. தமிழ்நாட்டில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தப்படவில்லையா? நடக்கவே இல்லையா? போராட்டங்களை நடத்திவிட்டு போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல, மனசாட்சிக்கும் அறமல்ல” என சாடியிருந்தது.
இதனையடுத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி, 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது. அதன்படி, கே.பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆக உள்ளதால் தன்னை கட்சி பொறுப்புகளிலிருந்து விடுவிக்குமாறு தலைமைக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்றுவரும் அக்கட்சியின் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.