தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை பறித்து, திட்டிய காங்கிரஸ் தலைவர்..

 
டி.கே.சிவகுமார்

கர்நாடகாவில் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை பறித்து, திட்டிய  அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், தனது செயலுக்கு அவர் ராஜீவ் காந்தி கொலையை உதாரணம் காட்டியது விமர்சனங்களை எழுப்பியுள்ளது

கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே. சிவகுமார். கட்சியின் பிரச்சினைகளை தீர்ப்பவர் என்று அவரை பெருமையாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறுவர். அதேசமயம் கோபத்திலும் அவர்தான் நம்பர் ஒன். கடந்த ஜூலை மாதத்தில் தனது தோள் மீது கை போட  முயன்ற கட்சி தொண்டர் ஒருவரை சிவகுமார் அறைந்து விட்டார். அப்போது அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

டி.கே.சிவகுமார் செல்போனை பறிக்கும் காட்சி

இந்நிலையில் தற்போது  தனது அருகில் வந்து செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை பறித்து டி.கே. சிவகுமார் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். மாண்டியாவில் கூட்டம் ஒன்றில் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை சிவகுமார் பிடுங்கி பின்னர் திட்டி அந்த செல்போனை அவரிடம் மீண்டும் கொடுக்கும்  காட்சி அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேசமயம் செல்போன் விவகாரத்தை  டி.கே. சிவகுமார், ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி

டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒருவரின் கையில் என்ன இருக்கும் என்று நமக்கு தெரியாது. ராஜீவ் காந்திககு என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். சில நேரங்களில், மனித கோபம் மற்றும் உணர்ச்சிகள் வெளிவரும். அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார். செல்பி விவகாரத்தில், ராஜீவ் காந்தி கொலையை குறிப்பிட்டதை பல்வேறு தரப்பினரும் டி.கே. சிவகுமாரை விமர்சனம் செய்துள்ளனர்.