பாதயாத்திரை சஸ்பெண்ட்.. ஆனால் மீண்டும் நடந்தே தீருவோம்.. கர்நாடக காங்கிரஸ் அறிவிப்பு

 
காங்கிரஸ்

கர்நாடகாவில் மேகதாது திட்டத்தை விரைவாக அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நடத்தி பாதயாத்திரை தற்காலிக நிறுத்தி வைத்துள்ளதாக அந்த கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகாவில் மேகதாது திட்டத்தை விரைவாக அமல்படுத்தக் ஆளும் பா.ஜ.க. அரசை வலியுறுத்தி, அம்மாநில காங்கிரஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 10 நாள் பாதயாத்திரை தொடங்கியது. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், காங்கிரசார் பாதயாத்திரையை மேற்கொண்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. ஆனாலும் காங்கிரஸ் தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டது. 

காங்கிரஸ் பாதயாத்திரை

இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் பாதயாத்திரையின் இறுதி நிகழ்ச்சிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது மற்றும் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பு போன்ற காரணங்களால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ராமநகரில் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் பாதயாத்திரை சஸ்பெண்ட் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் ஒரு மனதாக முடிவு எடுத்தனர். 

சித்தராமையா

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். எங்கள் பாதயாத்திரையின் காரணமாக கோவிட் பரவாமல் பார்த்து கொள்வது எங்கள் பொறுப்பு, எங்களுக்கு கவலைகள் இருந்தபோதும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தாலும் இன்று நாங்கள் பாதயாத்திரை தொடர்பாக விவாதித்தோம். கோவிட் நிலைமையை மோசமாக்குவதற்கு நாங்கள்தான் காரணம் என்று மக்கள் உணருவதை நாங்கள் விரும்பவில்லை. ஆகையால் பாதயாத்திரையை சஸ்பெண்ட் செய்துள்ளோம். மாநிலத்தில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தவுடன் கட்சி பாதயாத்திரையை மீண்டும் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.