ஒருவருக்கு மரியாதை அளித்தால் கேவலமாக பேசாமல் அன்பான வணக்கங்களுடன் பாராட்டப்பட வேண்டும்.. கரண் சிங்
நமது சகாக்களில் ஒருவருக்கு மரியாதை அளிக்கப்பட்டால், கேவலமான கருத்துக்களை காட்டிலும், அன்பான வணக்கங்களுடன் அவர் பாராட்டப்பட வேண்டும் என்று குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங் குரல் கொடுத்துள்ளார்.
நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்துக்கு அறிவிக்கப்பட்டது. குலாம் நபி ஆசாத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதை கபில் சிபல் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றாலும், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரண் சிங், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கரண் சிங் கூறியதாவது: எனது நல்ல நண்பரான குலாம் நபி ஆசாத்துக்கு தகுதியான பத்ம விருது தொடர்பான வழக்கத்திற்கு மாறான சர்ச்சையால் நான் வேதனையடைந்தேன். ஆசாத் கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் அரசியல் ஏணியில் உச்சிக்கு அமர்ந்தார்.
மேலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக அவர் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பாத்திரத்தை வகித்தார். எங்கள் சகாக்களில் ஒருவருக்கு மரியாதை அளிக்கப்பட்டால், அவர் கேவலமான கருத்துக்களை காட்டிலும், அன்பான வணக்கங்களுடன் பாராட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் இருந்த தற்போது உயிரோடு இருக்கும் ஒரு உறுப்பினர் கரண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.