"காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சல்யூட்" - சர்ச்சை சாமியார் மீது வழக்குப்பதிவு!
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்துத்துவ அமைப்புகள், தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுப்படுத்துவதும், அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவை புகழ்ந்து பேசுவதும் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. குறிப்பாக பாஜக எம்பி பிரக்யா தாக்கூரே நாடாளுமன்றத்தில் அப்படி தான் பேசினார். ஆனால் அதனை பிரதமர் மோடியோ மற்ற அமைச்சர்களோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எதிர்க்கட்சி எம்பிக்கள் மட்டுமே கொந்தளித்தனர். இவரே இப்படியென்றால் இந்துத்துவ அமைப்பினர் சும்மா விடுவார்களா என்ன?

அப்படி தான் சாமியார் ஒருவர் பேசியிருக்கிறார். சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் தர்மா சனாசத் என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த காளிசரண் மகராஜ் என்ற சாமியாரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், "அரசியல் மூலம் நாட்டைக் கைப்பற்றுவது தான். இஸ்லாமியர்களின் நோக்கம். நம் கண் முன்னையே 1947ஆம் ஆண்டு தேச பிரிவினை நிகழ்ந்தது. அதற்கு முன்னர் ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினார்கள்.

வங்கதேசத்தையும், பாகிஸ்தானையும் கூட அரசியல் மூலம்தான் அவர்கள் கைப்பற்றினார்கள். ஆனால் இதற்கு பழிவாங்கும் விதமாக காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு நான் தலை வணங்குகிறேன். இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் காவிக் கொடி ஏந்தி எந்த கூட்டமும் , பேரணியும் நடத்தாதீர்கள் என்று போலீஸார் எங்களிடம் தெரிவித்தார்கள். இது போலீஸாரின் தவறு அல்ல. நிர்வாகத்தின், அரசின் அடிமைகள்தான் போலீஸார். தலைவரின் அடிமைதான் அரசு. இந்து மதத்தைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உள்ள தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் இவற்றை பாதுகாக்க முடியும்” என்றார்.
At yet another anti-Muslim Dharam Sansad, Kalicharan Maharaj (a regular panellist on Sudarshan TV and shows of far-right YouTuber Pushpendra Kulshrestha) abuses Mahatma Gandhi and glorifies his assassin. This time in Congress ruled Chhattisgarh. pic.twitter.com/D2fkZkdu14
— Alishan Jafri (@alishan_jafri) December 26, 2021
இவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மகாத்மா காந்தியை அவதூறாகப் பேசியது, இரு மதங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசியதாக காவல்துறையிடம் காங்கிரஸ் நிர்வாகி பிரமோத் துபே புகார் செய்தார். இதையடுத்து காளிசரண் மீது திக்ராபாரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி 505 (2), 294 ஆகிய பிரிவுகளின் கீழ் காளிசரண் மீது முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.


