பாஜக அண்ணாமலை மட்டுமல்ல நாம் தமிழர் கட்சி சீமானாக இருந்தாலும் நாங்கள் தான் எதிர்க்கட்சி- கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக அண்ணாமலை மட்டுமல்ல நாம் தமிழர் கட்சி சீமான் இருந்தாலும் தாங்கள் தான் எதிர்க்கட்சி என முன்னிலை படுத்தி பேசுவார்கள். ஆனால் மக்களால் எதிர்க்கட்சியாக அதிமுக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதே போல் எந்த தேர்தலாக இருந்தாலும் தன்னந்தனியாக நின்று தேர்தலை சந்தித்த கட்சி அதிமுக தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நிற்க்க தயார்.
இதே போல் திமுக தேர்தலை சந்திக்க தயாரா? பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது மீடியாவை சந்திக்கிறார். செய்திகளில் வருகிறது சுட்டி காட்டுகிறார். ஆனால் நாங்கள் செய்திகளுக்காக பேசுவது கிடையாது. மக்கள் பிரச்சினைக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. திமுக அரசு எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல மக்களையே ஏளனமாக பேசக்கூடிய நிலைமையில் இருக்கின்றனர் ஓசி பஸ் என கூறிவிட்டு இப்போது வருத்தம் தெரிவிக்கின்றார்
இன்றைக்கு நிதி வருவாயை பெருக்குவதற்கு எந்த கட்டமைப்பும் செய்யாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் சட்டமன்ற உறுப்பினர் நிதியை கூட முழுமையாக கொடுக்க முடியாத நிலைமையில் தான் இந்த அரசு உள்ளது. இது அரசின் கையாலாகத தனத்தை தான் காட்டுகிறது. அதிமுக இன்றைக்கு ஒன்றுபட்ட அதிமுகவாக தான் உள்ளது. அதிமுக இன்று ஒரு சில பேர் பிரிந்து இருக்கலாம். இது காலம் காலமாக நடப்பது தான் அதிமுகவில் என்றுமே பிளவு கிடையாது. இன்று அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளது” எனக் கூறினார்.