ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவை நடத்த வாய்ப்பில்லை- கடம்பூர் ராஜூ
கட்சியை வழிநடத்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அன்று நடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2 நாட்களாக வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொது குழுவிற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எந்தவிதமான தடையும் இல்லை என்றும் ஜூலை 11 ஆம் தேதி அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும் மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பொதுக்குழு நடத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் அதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நீதிமன்றம் ஆணையாளரை நியமித்து பொதுக்குழுவை நடத்த உத்தரவிடும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான கடம்பூர் ராஜூ, “அரசியல் கட்சி நிலைபாட்டை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. அரசியல் கட்சி நிலைப்பாட்டை நீதிமன்றம் ஒன்று முடிவு செய்துவிட முடியாது.. இரட்டைத் தலைமை வேண்டாம் என்பதற்காக தான் பொதுக்குழுவை நடத்தினோம். பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்களிடம் தான் உள்ளனர். எங்களின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவை நடத்துவதற்கு வாய்ப்பில்லை. நீதிமன்றம் வந்து கட்சி வழி நடத்த முடியாது. சட்ட வல்லுநர்களோடு கலந்து மேல்முறையீடு செய்வோம்”எனக் கூறினார்.